PAGE 8

அழகுக்கும் ஆண்மைக்கும் ஏற்ற வெண்டைக்காய்..!

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.
__________________________________________________________________________________
பொன்னாங்கண்ணி கீரை

உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவ குணங்களை கொண்டது

இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து,இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

பலன்கள்

கண்பார்வைக்கு மிகவும் நலல்து.

சருமத்துக்கு மிகவும் நல்லது.

மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.

ரத்தத்தை சுத்தீகரிக்கும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.


எச்சரிக்கை

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.

ஒன்று அலல்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லையே என நினைக்கக் கூடாது. வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள், குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் வரை சாப்பிட வேண்டும். அப்போதுதான் அது உடலில் சார்ந்து நோய் நொடிகளை ஓட ஓட விரட்டும்.
________________________________________________________________________________

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்..!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.
____________________________________________________________________________
சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.
________________________________________________________________________________

அல்சர் அவதியா..?
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
_________________________________________________________________________________

சிறுநீரகக் கோளாறின் எதிரி! - முள்ளங்கி

முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும்.

கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது.

வேறு பெயர்கள்: முளா, தசணாக்கியா, முலகஞ்சாமியம், விசுறுகுபந்தம்

வகைகள்:

வெள்ளை முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும். இதையே நாட்டு முள்ளங்கி என்று கூறுவார்கள். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவத்திற்கு மிகவும் சிறந்தது.

சிவப்பு முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

நீலம் கலந்த மஞ்சள் முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் காய்கள் இருக்கும். இதைப் பெரும்பாலும் சமையலுக்கே பயன்படுத்துவார்கள்.

ஆங்கிலத்தில்: Raphanus sativus; Linn; Brassicaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:

முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.

முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.

முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.

முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.

பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.

முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்.
_________________________________________________________________________________